எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஓசியில் இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கக்கூறி மெக்கானிக்கை தாக்கிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை பாலமேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை, வாடிப்பட்டியில் மெக்கானிக் கடை வைத்துள்ள, திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் கடைக்கு கடந்த 4-ஆம் தேதி சென்றுள்ளார். தொடர்ந்து தனது இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது பார்த்துத் தரவேண்டுமென சீனிவாசனிடம் கேட்டுள்ளார். மேலும் அவரை மிரட்டி கன்னத்தில் அறைந்து, தரக்குறைவாக பேசியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், சிசிடிவி ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட சீனிவாசன், மாவட்ட எஸ்.பி., அர்விந்த் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியில் பணியில் இருந்த எஸ்ஐ அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை பழுது நீக்கியது தொடர்பாக இதுவரை 8 ஆயிரத்து 600 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மீண்டும் முன்பணம் ஏதும் தராமல் இருசக்கர வாகனத்தில் பழுதை நீக்குமாறு கூறி எஸ்ஐ அண்ணாமலை, தன்னை மிரட்டியதாகவும் ஓசியில் வேலை பார்க்காவிட்டால் கஞ்சா வழக்கு, என்கவுன்டர் என கடை ஊழியரை மிரட்டியதாகவும் மெக்கானிக் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மெக்கானிக்கை எஸ்ஐ அண்ணாதுரை தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.