எழுத்தின் அளவு: அ+ அ- அ
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சாலை விபத்தில் துரதிருஷ்டவசமாக பெற்றோர் பலியான நிலையில் அதிர்ஷ்டவசமாக மழலைகள் உயிர் தப்பினர்... பெற்ற குழந்தைகளை காப்பாற்றி உயிரை பறிகொடுத்த பெற்றோர் பற்றிய உருக்கமான தொகுப்பை தற்போது காண்போம்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் புதூரைச் சேர்ந்தவர் 30 வயதான அழகரசன்... அழகரசனுக்கு சூர்யா இளமதி என்ற மனைவியும், கிஷோர், திருத்தி என இரு குழந்தைகளும் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில், அழகரசன் - இளமதி தம்பதியதியர் இரு சக்கர வாகனத்தில் இரு குழந்தைகளுடன் பண்ணவாடியில் உள்ள இளமதியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
குழந்தைகள் கிஷோர், திருத்தி தாய், தந்தையருக்கு இடையில் உட்கார்ந்து கொண்டிருந்த நிலையில், ராமன் நகர் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்று கொண்டு இருந்தார் அழகரசன்.
அப்போது முன்னாள் சென்ற பால் ஏற்றி வந்த லாரி பிரேக் அடித்து நிற்க, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த அழகரசனும் தனது வாகனத்தை நிறுத்தினார்.
அப்போது பின்னால் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, அழகரசனின் இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியதில், முன்னாள் நின்ற ஆவின் பால் லாரி, மற்றும் நெல் ஏற்றி வந்த லாரிக்கும் இடையில் சிக்கி அழகரசனும், இளமதியும் உடல் நசுங்கி பலியானார்கள்.
நல்லவேளையாக குழந்தைகள் இருவரும் பெற்றோருக்கு நடுவில் உட்கார்ந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தில் இருந்து திருத்தி தாமாக எழுந்து நடந்து வந்த நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் குழந்தை கிஷோரை மீட்டனர்.
குழந்தை கிஷோருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மேட்டூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கணவன் மனைவி இருவரது சடலங்களையும் கருமலை கூடல் போலீசார் கைப்பற்றி உடற்கூர் ஆய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்களது உயிரை பறிகொடுத்து பெற்ற குழந்தைகளை காப்பாற்றிய பெற்றோரின் செயல் மனதை உருக்குவதாக அமைந்த நிலையில், குஞ்சாண்டியூர் புதூர் கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.