யானைகளை காப்பாற்றும் AI கேமராக்கள்... ஓராண்டில் விபத்துகள் 100% தவிர்ப்பு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை - பாலக்காடு வழித்தடத்தில் பொருத்தப்பட்ட அதிநவீன AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு  கேமராக்கள் மூலம் ரயில் தண்டவாளத்தை யானைகள் கடக்கும்போது ஏற்படும் விபத்தும், உயிரிழப்பும் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழ்நாடு - கேரள எல்லையான கோவை மாவட்டம் மதுக்கரை- வாளையாறு வனப்பகுதியில் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறப்பது தொடர்கதையாக இருந்தது. கோவை - பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்களில் 2008  முதல் இதுவரையில் 11 யானைகள் மரணித்துள்ளதாக வனத்துறையின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. முக்கியமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மதுக்கரை அருகே ஒரு குட்டியானை உள்பட மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு மரணித்த சோகம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 


இந்தநிலையில், இதுபோன்று யானைகள் உயிரிழப்பை தடுக்க பல கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வரிசையில், கடந்தாண்டு கோவை- பாலக்காடு வழித்தடத்தில் யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு ஏதுவாக இரண்டு சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டன. இங்கு செயற்கை நுண்ணறிவு  கேமராக்கள் பொருத்தப்பட்டு, தண்டவாளத்தை யானைகள் கடந்தால் அதுகுறித்து முன்கூட்டியே ரயில் ஓட்டுநருக்கு தகவல் அளித்து விபத்து நேராமல் தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 


மேலும், தண்டவாளம் அருகே யானைக் கூட்டம் நின்றால், மதுக்கரை கட்டுப்பாட்டு அறை மூலம் ரயில்வே மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு உடனடியாகத் தகவல் அளிக்கப்படுகிறது. இதற்காக, 12 தெர்மல் மற்றும் 12 ஆப்டிகல் என மொத்தம் 24 அதிநவீன செயற்கை நுண்ணறிவு  கேமராக்கள் 12 டவர்களில் பொருத்தப்பட்டுள்ளன. தண்டவாளத்துக்கு 200 மீட்டர் தூரத்தில் யானை வந்தாலே இந்த கேமராக்கள் அதனை உணர்ந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்புகிறது. 

அந்த தகவலின் அடிப்படையில் ரயில் இயக்க வழி வகை செய்யப்படுகிறது. இவ்வாறு செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்திய ஓராண்டில் 5 ஆயிரத்து 11 சிக்னல்கள் தரப்பட்டு 2 ஆயிரத்து 500 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து சென்று உள்ளது. இந்த தொழில்நுட்பம் யானைகளின் நகர்வுகளை துல்லியமாக கணித்து செயல்படுவதால் 100 சதவீதம் விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளதாக வன உயிரியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


இதுபோல வனப் பகுதியில் தண்டவாளம் செல்லும் அனைத்து இடங்களிலும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் உள்ள மதுக்கரை வழியைத் தவிர்த்து கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டிற்கு ரயில்களை இயக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

நாட்டிலேயே ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் திட்டம் முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Night
Day