ரம்ஜான் திருநாள் : புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.இ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு தனது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

மேலும், மனிதகுலத்திற்கு வழி காட்டியாக விளங்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒரு நிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளிப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார். 

அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வதாக கழகப் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், இஸ்லாமிய பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய நம் அம்மா, இஸ்லாமியப் பெருமக்கள் பயனுறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் அரிசி வழங்கினார்; உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 750 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதோடு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தினார் என்று புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

வக்ஃப் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகளை வழங்கிட சிறப்பு ஒருமுறை மானியமாக 3 கோடி ரூபாய் வழங்கினார்; பள்ளி வாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் தொடர்ந்து பழுது நீக்குதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 3 கோடி ரூபாயில் வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதியை உருவாக்கினார் என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிர்வாக மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தினார்; ஆதரவற்ற விதவை, ஏழை மற்றும் வயதான இஸ்லாமியப் பெண்களுக்கு உதவிடும் பொருட்டு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இஸ்லாமியப் பெண்கள் உதவிச் சங்கங்களை அமைத்து, ஒவ்வொரு சங்கத்திற்கும் 20 லட்சம் ரூபாய் வரை இணை மானியம் வழங்கினார் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

உருது மொழியை ஒரு மொழிப் பாடமாகப் பயின்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தினார்; நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டு தோறும் இலவசமாக வழங்க ஆணையிட்டது போன்ற உன்னத திட்டங்களால் இஸ்லாமியப்  பெருமக்கள் பெரிதும் பயனடைந்தனர் என்று கழகப் பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனை இந் நன்னாளில் பெருமிதத்துடன் நினைத்துப் பார்ப்பதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சிட்ததாய் சின்னம்மா தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

"இறைவன் மிகப் பெரியவன் - சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள் - மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள் - பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள் - இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது". 

இது போன்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை தவறாமல் கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்ந்து, தன் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தனது உளம் கனிந்த ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Night
Day