ராசிமணல் அணை திட்டம் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், தமிழகத்திற்கான மின் தேவையை பூர்த்தி செய்திடும் வகையிலும், ராசிமணல் அணை திட்டத்தை கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.


அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், இதே கருத்தை வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரின் நியாயமான கோரிக்கைக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் தொடங்கும் காவிரி ஆறு தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது - காவிரி நீரை பெரிதும் நம்பியிருக்கும் தமிழக டெல்டா விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு எப்போது காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடும் என எதிர்பார்த்து காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது - தமிழக டெல்டா விவசாயிகளின் பாசன நீர் தேவையை கருத்தில் கொண்டு, மழைக்காலங்களில் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், ராசிமணல் அணை திட்டம் தற்போது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.  

தமிழக எல்லையான ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்டினால் குறைந்த செலவில் 50 முதல் 100 டிஎம்சி வரையிலான தண்ணீர் தேக்கி வைக்க முடியும் - குறிப்பாக மேகதாதுவிலிருந்து ராசிமணல் வரை உள்ள 60 கிலோ மீட்டர் பகுதியில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும் - ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதினால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது - மேட்டூர் அணையில் நீர் குறையும் போது ராசிமணலில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம் - இதன் மூலம் ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் தண்ணீருக்கு ஏங்க வேண்டிய அவசியம் இருக்காது - காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உரிய நேரத்தில் குறுவை, சம்பா சாகுபடி செய்வதற்கு போதுமான தண்ணீர் கிடைக்க வழிவகை ஏற்படும் - மேலும், ராசிமணல் அணையில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு தமிழகத்தின் மின்சார தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

ஆனால், ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, திமுக தலைமையிலான அரசு, தமிழக விவசாயிகளைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், ராசிமணலில் அணை கட்டுவதற்கு தமிழக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக 1961 ஆம் ஆண்டு ராசிமணல் அணை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - மேலும், பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் ஆட்சிக்காலத்தில் ராசிமணலில் அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அப்போதைய மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது - அதனைத்தொடர்ந்து தமிழகத்திற்கு காவிரி நீருக்கான உரிமையை பெற்றுத்தந்த புரட்சித்தலைவி அம்மா கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், ராசி மணல் திட்டம் உட்பட 4 புனல் மின் திட்டங்களை கொண்டுவருவதற்கான உரிய வழிமுறைகளை விளக்கமாக எடுத்து கூறினார் - அதாவது தேசிய நீர்மின் கழகமோ அல்லது மத்திய அரசின் மற்ற தகுந்த மின் உற்பத்தி நிறுவனமோ இந்த புனல் மின் திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என புரட்சித்தலைவி அம்மா தலைமையிலான  தமிழ்நாடு அரசின் கோரிக்கையாகவும் இருந்தது - திமுக தலைமையிலான அரசு, தங்களது கூட்டணி கட்சியின் தலைமையிலான கர்நாடக அரசிடம் காவிரி நீரை கேட்டுப்பெற முடியாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நிலையில், ராசிமணல் அணை திட்டத்தை கொண்டு வர முன்வரவேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், தமிழகத்திற்கான மின் தேவையை பூர்த்தி செய்திடும் வகையிலும், ராசிமணல் அணை திட்டத்தை கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

Night
Day