ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல் நலக்குறைவால் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். 

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் இலங்கையை சேர்ந்த சாந்தன் நீண்ட காலம் சிறையில் இருந்த நிலையில் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த சாந்தன், சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், சொந்த ஊரான இலங்கைக்கு அனுப்பப்படாமல் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

56வயதான சாந்தனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தன்னை தாய்நாடான இலங்கை செல்ல அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அதை பரிசீலித்த வெளிநாடுவாழ் பிராந்திய பதிவு அலுவலகம், கடந்த 23ஆம் தேதி சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து ஓரிரு நாளில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 27ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஏழு ஐம்பது மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு சாந்தன் உயிரிழந்தார். தற்போது அவரது உடலை உடற்கூர் ஆய்வு செய்தபின் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் பணியில் மருத்துவர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையே சாந்தனின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Night
Day