எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியே ஸ்தம்பித்தது. கைதான மீனவர்களின் மனைவிகள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 10ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இந்நிலையில் இன்றும் நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படை மற்றும் நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில், மீனவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் மனைவிகளில் 35 பேர் பாம்பன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கிருந்த போலீசார் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்களை காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்தனர். இதனால் பாம்பன் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், இதுகுறித்து நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் திமுக அரசு மீனவர்களை ஏமாற்றி வருவதாகவும், தங்கச்சிமடம் மீனவர்கள் சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே பாம்பன் பாலத்தில் நடைபெற்ற மீனவர்கள் போராட்டத்தால் ராமேஸ்வரம் -ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் ராமேஸ்வரத்திற்குள் நுழைய முடியாமல், மண்டபம் முகாம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்திய மீனவர்களின் ஒரு தரப்பினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய அரசுக்கு 15 நாள் கெடு விதித்துள்ளனர்.