எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவண்ணாமலை அருகே, தீபாவளி சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ள தம்பதியை கைது செய்யக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மனம் நொந்த அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
திருவண்ணாமலையை அடுத்த டி.கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மற்றும் அவரது மனைவி விஜயா. இவர்கள் திருவண்ணாமலை, ஆவூர், கரிப்பூர், கெங்கம்பட்டு, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, வேட்டவலம், பழையனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொது மக்களிடமிருந்து 400 ரூபாய், ஆயிரத்து 100 ரூபாய், ஆயிரத்து 200 ரூபாய், ஆயிரத்து 800 ரூபாய் என 4 பிரிவுகளாக தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர்.
சீட்டில் சேருவோருக்கு 4 கிராம் தங்கம், 10 கிராம் வெள்ளிக்காசு மற்றும் மளிகை சாமான்கள் வழங்கப்படும் என ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளனர். இதில் மயங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீபாவளிச் சீட்டில் சேர்ந்துள்ளனர். மேலும் முருகன்-விஜயா தம்பதி நியமித்த ஏஜெண்டுகளும் ஏராளமானோரை சேர்த்து, அவர்களிடம் இருந்து மாதா மாதம் பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு தீபாவளி முடிந்தும் இதுவரை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய தங்கம், வெள்ளி, மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்காமல் முருகனும் விஜயாவும் அலைக்கழித்து வந்ததுடன் திடீரென தலைமறைவாகினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஏஜெண்டுகளும், பணம் கட்டியவர்களும் காவல்துறையில் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் மாதங்கள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்ட ஏஜென்ட்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் தங்கள் பணத்தை உடனடியாக மீட்டுத் தரக்கோரி வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பணம் கட்டியவர்கள் தங்கள் வீடுகளில் வந்து தகராறில் ஈடுபடுவதாகவும், அதனால் பணத்தை மீட்டுத் தருமாறும் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் வடித்தனர்
தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் தர்ணாவைக் கைவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோருக்கு கொண்டாட்டம்தான் என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. அதனால் இது போன்ற சம்பவங்களை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவது ஒன்றே வழி என வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.