எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்த நெய்யில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாமிச கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கியதாக தேவஸ்தானம் குற்றம்சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்துள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம், தங்களின் பொருட்கள் குறித்து எந்நேரமும் ஆய்வு செய்து கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதனிடையே நேற்று திண்டுக்கல் ஏ. ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளின் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து இன்று மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நிறுவனத்தில் இருந்து பால், நெய் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து சென்றதாக கூறப்படுகிறது. ஆய்வுக்குப் பின் இதில் ஏதும் தவறு இருந்தால் இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.