எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடுமெனவும், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வடங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனையடுத்து, இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும்,
நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 25ம் தேதி வரை கடலில் 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.