சென்னை தேனாம்பேட்டையில் ஏழை எளிய மக்கள் வாழவே தகுதியற்ற முறையில் சிறய அளவிலான குடியிருப்புகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளே வேண்டாம், குடிசை வீடுகளே போதும் என்ற நிலைமைக்கு குடியிருப்பு வாசிகள் தள்ளப்பட்டுள்ளனர். கிரியப்பா சாலையில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை கிரியப்பா சாலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் சிதிலமடைந்ததால், அந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித் தர நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
அதன்படி ஏற்கனவே 176 வீடுகள் கொண்ட அந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு, 450 சதுரஅடிகள் கொண்ட பெரிய வீடுகளாக கட்டித் தரப்படும் என அங்கு வசித்து வந்த மக்களை விளம்பர திமுக அரசு அப்புறப்படுத்தியது. ஆனால் வாக்குறுதி அளித்தது போல், பெரிய வீடுகளாக கட்டாமல், வெறும் 271 சதுரஅடியில் மட்டுமே வீடுகள் கட்டப்படுவதால், அங்கு குடியிருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு படுக்கை அறை, சமையலறை, ஹால் என அனைத்தையும் சுருக்கி, காத்தோட்டமே இல்லாமல் குடியிருப்புகள் கட்டப்படுவதால், இருளில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் தங்கள் மனகுமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அடிப்படை வசதியான குடிநீர் முறைாக கிடைக்க எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஏற்கனவே 176 வீடுகள் இருந்த இந்த இடத்தில் தற்போது ஆறு தளங்கள் கொண்ட சிறிய அளவிலான 192 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், வரைபடத்தில் 450 சதுரஅடிகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்படும் எனக் கூறிவிட்டு, பொதுமக்கள் வசிக்க முடியாத வகையில், அதிகாரிகள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு குடியிருப்புகள் கட்டப்படுவதாக, மூன்று தலைமுறைகளாக அங்கு வசித்து வந்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த பல மாதங்களாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை என்றும், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் தங்களுக்கு கார் பார்க்கிங் எதற்கு என்றும் குடியிருப்புவாசிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளே வேண்டாம், குடிசை வீடுகளே போதும் என்ற நிலைமைக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகளை இடித்துவிட்டு தங்களுக்கு உறுதி அளித்தபடி வசதியான வீடுகளை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கிரியப்பா சாலையில் மூன்று தலைமுறைகளாக இருக்கும் தங்களை வெளியேற்றிவிட்டு தரமற்ற வசதி இல்லாத, குறுகிய வீடுகளை கட்டுவதாக அங்கு குடியிருந்த மக்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஏழைகளுக்கான அரசு எனக் கூறிவிட்டு, அவர்களுக்கான எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல், வசிக்கும் வீடுகளையே இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு, வசதி இல்லாத வீடுகளை கட்டுவதுதான் விளம்பர திமுக அரசின் மக்கள் நல திட்டமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாக்குறுதி அளித்தபடி, வீடுகள் கட்டித் தரப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயா பிளஸ் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் பத்மநாபனுடன் சிறப்பு செய்தியாளர் ராம்குமார்...