எழுத்தின் அளவு: அ+ அ- அ
மழைக்காலத்தில் தமிழக மக்கள் தண்ணீரில் மிதப்பது கண்ணீர் கதையாகி வருவது மிகவும் வேதனையளிக்கிறது என்றும் தமிழக மக்களுக்கு பருவமழை காலங்களில் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை திமுக அரசு விரைந்து எடுக்க வேண்டும் எனவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக
புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, நெல்லை, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையே இன்னும் முழுமையாக ஆரம்பிக்காத நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பல இடங்கள் மழைநீரால் தத்தளித்து கொண்டு இருக்கிறது என்றும், மழைநீர் வெளியேறாமல் குடியிருப்புகளை சூழ்ந்து உள்ளதால் தமிழக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான விளம்பர அரசு நான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருந்தாலும், அவர்களின் நிர்வாக திறமையின்மையும், ஆட்சியின் லட்சணமும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நிரூபித்து வருவது வெட்டவெளிச்சமாகி வருகிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் தொடக்க நிலையிலேயே நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ள சின்னம்மா, ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் திமுக தலைமையிலான அரசு சென்னையில் மழைநீர் அதிகம் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை 99 சதவிகிதம் முடித்து விட்டதாக மக்களிடம் பொய்யாக பரப்புரை செய்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பருவ மழைக்காலங்களில் மக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான் ஒரு அரசின் கடமை ஆகும் என்றும்
சென்னை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சென்னை மாநகரில் பெய்யும் மழைநீரானது அடையாறு, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆகிய மூன்று ஆறுகளின் மூலமாக வெளியேறும் மழைநீரானது அந்தந்த பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் வடிந்து, அதன்பிறகு மூன்று ஆறுகளையும் சென்றடைகிறது எனவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு மழைநீர் தொடர்ந்து வெளியேற ஒவ்வொரு ஆண்டும் ஆற்றின் முகத்துவாரங்கள் மற்றும் வாய்க்கால்கள் அனைத்தும் முறையாக தூர் வாரப்பட்டு சுத்தமாக இருக்கவேண்டும் என்று சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இந்த மூன்று ஆறுகளும் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது என்றும், அதேபோன்று ஆற்றின் முகத்துவாரங்கள் சுத்தப்படுத்தப்படாமலும் அடைபட்டுக்கிடப்பதாக தெரிய வருவதாகவும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
மேலும், பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக கட்டப்படாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், மழைநீரை வெளியேற்ற தேவையான மேற்கண்ட அடிப்படை நடவடிக்கைகளை செய்யாமல், எவ்வளவுதான் இயந்திரங்களை கொண்டு மழைநீரை வெளியில் எடுத்தாலும் அதனை அப்புறப்படுத்துவது மிகவும் கடினம் என்று சின்னம்மா தெரிவித்துள்ளார்.
வடிகால் பணிகள் முடிப்பதற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்பட்டதா? என்பது யாருக்கும் தெரியவில்லை என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
"வரும் முன் காப்போம்" என்று செயல் பட வேண்டிய அரசோ "வந்த பின் காப்பாத்தலாம்" என்று நினைப்பது ஒரு அறிவார்ந்த செயல் ஆகாது என்றும், வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது மழைநீர் வடிகால் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். அனைத்து கால்வாய்களும் தூர் வாரி இருக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் மழைநீர் விரைவில் வெளியேற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருக்க வேண்டும் என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் திமுக தலைமையிலான விளம்பர அரசோ தண்ணீர் எடுக்கும் ராட்சத இயந்திரங்களை ஏற்பாடு செய்து இருப்பதாகவும், 36 படகுகள் வாங்கப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறது என்றும், இதிலிருந்து ஒன்று தெளிவாக புரிகிறது சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க எங்களால் ஒன்றும் செய்யமுடியாது, வேண்டுமென்றால் நீரில் மூழ்கியிருக்கும் குடியிருப்புகளை படகில் சென்று பார்வையிட தயாராக இருப்பதைத் தான் காட்டுவதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே போன்று தான் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழக முதல்வர் அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுத்து இருக்கிறோம். சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட நிற்காது என்று கூறியதை நினைவு கூர்ந்துள்ள சின்னம்மா, ஆனால் அப்போது கனமழை பெய்து பல இடங்கள் மழைநீர் சூழ்ந்து மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். கடந்த ஆண்டு கனமழை பெய்து ஒரு வாரம் ஆன நிலையில் கூட மழைநீரை வெளியேற்ற திமுக தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு போன்ற நிவாரண உதவிகளை கூட செய்துதரவில்லை
என்றும், எனவே, திமுக தலைமையிலான அரசின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிடாமல், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம் எனவும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
சென்னையில் சோழிங்கநல்லூர் மண்டலத்துக்குட்பட்ட பள்ளிக்கரணை, மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில்தெரு, கிண்டி பிரதான சாலை, ராயப்பேட்டை வி.எம்.தெரு, ஆதம்பாக்கம் ஜீவன் நகர் பிரதான சாலை, ஆலந்தூர் அருகே உள்ள திருவள்ளூர் பிரதான சாலை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் எதிரிலும் மழை நீர் வடிகால் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் என சின்னம்மா தெரிவித்துள்ளார்.
சாலைகள் முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாலும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் முதல் மூத்த குடிமக்கள் வரை சாலைகளை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர் என்றும், திமுக தலைமையிலான அரசின் அலட்சியப்போக்கால், சமீபத்தில் உதயம் திரையரங்கம் அருகில் 35 வயது நிரம்பிய ஐயப்பன் என்ற நபர் மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்ததையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக, தூர்வாரப்பட்ட சாக்கடை கழிவுகள் மூட்டை மூட்டைகளாக சாலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர் என்று சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே இங்கு மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சூழலில், தற்போது தூர்வாரப்பட்ட சாக்கடை கழிவு மூட்டைகளால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என்று புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் இருபுறமும் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது என்றும், திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்பதற்கு கோயம்பேடு சாலைகளே சாட்சியாக உள்ளதாகவும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழக மக்களை பாதுகாக்க மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைளைப் போன்று, திமுக தலைமையிலான அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தரவேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள வெள்ளநீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ள சின்னம்மா, தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களுக்கு தங்குமிடம், குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை தடையின்றி கிடைக்க ஆவனசெய்யவேண்டும் என்று புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மின்சார துறையை சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு மின் விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சின்னம்மா, அதேபோன்று மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையை சேர்ந்த ஊழியர்கள் சாலைகளில் மழைநீர் தேங்காமல், போக்குவரத்து தடையின்றி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீர்நிலைகள், கால்வாய்களை தொடர்ந்து பராமரித்து மழைநீர் வெளியேறும் வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என தமிழக அரசை புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்கொண்டுள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு முறையான திட்டமிடல் இல்லாமல் பல ஆயிரம் கோடிகள் செலவில் மழைநீர் வடிகால் பணிகளை செய்ததாக சொன்னாலும், யாருக்கும் எந்தவித பலனும் இல்லை என்று சின்னம்மா தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் தமிழக மக்கள் தண்ணீரில் மிதப்பது கண்ணீர் கதையாகி வருவது மிகவும் வேதனையளிக்கிறது என்று சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, திமுக அரசு தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்துவதிலும், மின் கட்டண உயர்வை செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பதை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு பருவமழை காலங்களில் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசை , அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.