எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, நடவு செய்யாமல், விதை விதைக்காமல், தண்ணீர் பாய்ச்சாமல், உரம் வைக்காமல், 8 மூட்டை நெல் அறுவடை செய்து, மகிழ்ச்சியில் திகைத்துள்ளார் விவசாயி ஒருவர். இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டு ஏக்கர் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார்.
ஆனால் போதுமான விளைச்சல் இல்லாமல் செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் நஷ்டம் அடைந்ததால், கடந்த முறை நெல் சாகுபடி செய்யாமல் அப்படியே தரிசாக விட்டுவிட்டார்.
அதற்குப்பின் வயலுக்கு செல்லாமல் இருந்த ஜெயராஜை, இரண்டு தினங்களுக்கு முன் தொடர்பு கொண்ட அப்பகுதி மக்கள், உங்கள் வயலில் கதிர் விட்டு பயிர்கள் சாய்ந்துள்ளது ஏன் அறுவடை செய்யாமல் உள்ளீர்கள் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக வயலுக்கு செல்லாமல் இருந்து வந்த ஜெயராஜ், மீண்டும் வயலை பார்க்கச் சென்றபோது, அங்கு கதிர் விட்டு பயிர்கள் சாய்ந்துள்ளதை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.
நடவு செய்யாமல், விதை விதைக்காமல், தண்ணீர் பாய்ச்சாமல், உரம் வைக்காமல், 8 மூட்டை நெல் அறுவடை செய்து, தன்னை மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் விவசாயி ஜெயராஜ் .
ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத நெல் விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது எட்டு மூட்டை விளைந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயி ஜெராஜ் குறிப்பிட்டார்.