எழுத்தின் அளவு: அ+ அ- அ
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு எதிராக கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிந்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.