எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணையில் வரும் 29ம் தேதி ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 4ல் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகாத நிலையில், ஒரு நாள் கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். நீதிபதி அழைப்பதற்கு முன்பாக சீமான் உள்ளே நுழைந்ததால் தாம் இன்னும் அழைக்கவில்லை என்றும் எதற்காக உள்ளே வந்தீர்கள் எனவும் நீதிபதி விஜயா கேள்வி எழுப்பினார். இதையடுத்து வெளியே நிற்குமாறு சீமானுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். வெளியே காத்திருந்த சீமானை மதிய உணவு இடைவெளிக்கு பிறகு ஆஜராகுமாறு நீதிபதி விஜயா உத்தரவிட்டார். இந்தநிலையில், டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணையில் வரும் 29ம் தேதி ஆஜராகுமாறு சீமானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.