எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 5 பேர் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தனர்.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில், வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண சென்ற பல லட்சக்கணக்கான மக்கள் வெயிலின் தாக்கத்திலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கித் தவித்தனர். இந்த வெயிலின் தாக்கம் காரணமாக 230 பேர் மயக்கமடைந்ததாக தகவல் வெளியானது. அதில் 93 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (34 )என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய கார்த்திகேயன், திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவருடைய மனைவி ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்த பொழுது கார்த்திகேயன் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதே போல், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகசத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து அருகில் இருக்கக்கூடிய ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சீனிவாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜான் என்பவர், மெரினா நீச்சல் குளம் அருகே மயக்கம் அடைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெயிலின் தாக்கத்தின் காரணமாக அவர் உயிரிழந்ததாக ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்தார்.