எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடியில் தனியார் உர தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தனியார் உரத்தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் அமோனியா பைப்லைனில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பணியில் ஹரிஹரன், தன்ராஜ், மாரிமுத்து விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அமோனியா வாயு அதிகளவு கசிந்ததால், ஹரிஹரன் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தனராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, முத்தையாபுரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் உயிரிழந்த ஒப்பந்த ஊழியர் ஹரிஹரனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், தூத்துக்குடி காவல்நிலையம் முன்பு 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹரிஹரனின் குடும்பத்தினருடன், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதில், உடன்பாடு எட்டப்படாததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் உறுதி அளித்ததையடுத்து ஹரிஹரனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
இதனிடையே, வாயு கசிவு ஏற்பட்ட தனியார் உர தொழிற்சாலையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலை வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.