விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குகள் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 29.97 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை அடுத்து, இத்தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 800 காவலர்களும் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி, 29 புள்ளி 97 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டியில் 229வது வாக்குச்சாவடியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் வாக்காளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். வாக்குப்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் 3 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த மக்கள் அவதிக்கு ஆளாகினர். 

விக்கிரவாண்டி தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கப்படாததால் வாக்காளர்கள் சிரமம் அடைந்தனர். காணையில் உள்ள 126வது வாக்குச்சாவடி, மாம்பழப்பட்டியில் உள்ள 66வது வாக்குச்சாடி, ஒட்டன் காடுவெட்டியில் உள்ள 68வது வாக்குச்சாவடி ஆகிய மூன்று வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாததால் வாக்காளர்கள் அவதியடைந்தனர். இதனையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. 

விக்கிரவாண்டி தொகுதியில் 242வது வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. 242வது வாக்குச்சாவடியில் ஆயிரத்து 200 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தனது வாக்கினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி அத்தியாவசிய தேவையான பால் விற்பனையகம், மருந்துக்கடைகளை அடைக்க சொல்லி போலீசார் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து, காணை பகுதியில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

விக்கிரவாண்டி பகுதியில் அத்தியாவசிய கடைகள் தவிர அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவையான உணவகம், மருந்தகம் கடைகள் தவிர, பிற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

Night
Day