விக்கிரவாண்டி குழந்தை உயிரிழந்த சம்பவம் - பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த 5 வயது குழந்தைக்கு பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பழனிவேல் என்பவரின் 5 வயது மகள் லியா லட்சுமி யுகேஜி படித்து வந்துள்ளார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற குழந்தை, மதிய உணவு இடைவேளையின் போது வெளியே சென்றநிலையில் வகுப்பறைக்கு திரும்பவில்லை.  சந்தேகமடைந்த ஆசிரியர்கள் பல்வேறு இடங்களிலும் தேடிய நிலையில், பள்ளி பின்புற மைதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் மாணவி லியா லட்சுமி விழுந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவியை வெளியே எடுத்து பார்த்த போது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. 



கழிவுநீர் தொட்டியில் இருந்த மூடி ஏற்கனவே உடைந்துவிட்ட நிலையில், அதன் மீது பிளக்ஸ் பேனரைக் கொண்டு பள்ளி நிர்வாகத்தினர் மூடி வைத்துள்ளனர். இதனை கவனிக்காமல் அதன் மீது குழந்தை கால் வைத்ததால் தொட்டிக்குள் விழுந்ததாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சிறுமியின் உடலை மீட்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


  
இதனிடையே, கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழக்க வாய்ப்பில்லை என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.  தரை மட்டத்தில் இருந்து 4 அடி உயரத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஒன்றரை அடி அளவு மட்டுமே உள்ள துவாரத்திற்குள் குழந்தை விழுந்தது எப்படி என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய குழந்தை லியாலட்சுமியின் தந்தை பழனிவேல், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து விக்கிரவாண்டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இதையடுத்து,  பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையின் முடிவில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, பிரேத பரிசோதனை முடிந்த குழந்தையின் உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. குழந்தையின் உடலை சூழ்ந்து நின்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. 

Night
Day