எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தனது விடா முயற்சியால் இறுதிச்சுற்றில் நுழைந்த முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனை படைத்திருந்த நிலையில், 100 கிராம் எடை கூடுதலாக உள்ளார் என்று கூறி, திடீரென்று தகுதிநீக்கம் செய்யப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தனது விடாமுயற்சியால் இறுதிசுற்றில் நுழைந்த முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனை படைத்த நிலையில், உறுதியாக தங்கப்பதக்கம் பெறப்போவதை நாடே எதிர்பார்த்திருந்த நிலையில் 100 கிராம் எடை கூடுதலாக உள்ளார் என கூறி திடீரென்று தகுதி நீக்கம் செய்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.
மல்யுத்த போட்டியில் ஜாம்பவானாக விளங்கிய ஜப்பான் வீராங்கனை சுசாகியை வீழ்த்தி இந்திய மக்கள் மட்டுமின்றி, உலகத்தையே உற்று நோக்க வைத்த வீரமங்கை வினேஷ் போகத், தனது கடின உழைப்பால் இறுதிப்போட்டி வரை சென்று இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது - இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அறிய மத்திய அரசு தகுந்த விசாரணை மேற்கொள்வது, நமது நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தங்கப்பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டிருந்தாலும், உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், மேலும் பல சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.