விறுவிறுப்பாக நடைபெற்ற புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தது. இதில் பெரும்பாலும் காளைகளே பரிசுகளை தட்டிச் சென்றன. 

மாடுபிடி வீரா்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கிய இந்த போட்டியில், ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.  வாடிவாசல் பகுதியில் பூஜைகள் நடத்தப்பட்டு, முதலில் 7 கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து, முதல் சுற்றில் 108 காளைகளும், மஞ்சள் நிற சீருடை அணிந்து 50 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். முதல் சுற்றில் பாலமேடு சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன், ராஜா, அஜித் ஆகியோர் தலா 3 காளைகளை அடக்கினர். 

2-வது சுற்றில் 105 காளைகளும், ஊதா நிற சீருடை அணிந்து 50 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டின. முதல் மற்றும் 2வது சுற்றில் 6 காளைகளை அடக்கி சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடத்தில் நீடித்தார். அதனை தொடர்ந்து, பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 4 காளைகளை அடக்கி 2-வது இடத்திலும், ராஜா மற்றும் அஜித் ஆகியோர் தலா 3 காளைகளை அடக்கி 3-வது இடத்திலும் நீடித்தனர்.

3-வது சுற்றில், வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட 76 காளைகளை, இளஞ்சிவப்பு நிற சீருடை அணிந்த 50 வீரர்கள் அடக்க களமிறங்கினர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சித்தனர். பல காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டியதுடன், எரிச்சலூட்டிய வீரர்களை காளைகள் தூக்கி வீசி பந்தாடின. 

4-வது சுற்றில் பச்சை நிற சீருடையுடன் களமிறங்கிய 50 மாடுபிடி வீரர்கள், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட 84 காளைகளில் 19 காளைகளை அடக்கி வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

5-வது சுற்றில் சாம்பல் நிற சீருடையுடன் களமிறங்கிய 50 மாடுபிடி வீரர்கள், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட 87 காளைகளில் 15 காளைகளை மட்டுமே அடக்கினர். 

6-வது சுற்றில் சந்தன நிற சீருடையுடன் 50 மாடுபிடி வீரர்கள் களமிறங்கிய வீரர்கள், அவிழ்த்துவிடப்பட்ட 80 மாடுகளில் 3 மாடுகள் மட்டுமே வீரர்களிடம் பிடிபட்டன. மற்ற மாடுகள் வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டியதால் வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். 

7-வது சுற்றில் பச்சை நிற சீருடை அணிந்த 50 வீரர்கள் களமிறங்கினர். 7-வது சுற்றில் மட்டும் 80 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 11 மாடுகள் பிடிமாடுகளாக அறிவிக்கப்பட்டன. 7-வது சுற்று முடிவில், மதுரை மாவட்டடம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் 8 காளைகளையும், மதுரை தமிழரசன், சிவகங்கை பாண்டீஸ்வரன் ஆகியோர் தலா 6 காளைகளையும் அடக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 7-வது சுற்று முடிவு வரை மொத்தம் 620 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 

8-வது சுற்றில் ஆரஞ்சு நிற சீருடை அணிந்த 50 வீரர்கள் களமிறங்கினர். 8-வது சுற்றில் மட்டும் 94 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 16 மாடுகள் பிடிமாடுகளாக அறிவிக்கப்பட்டன. 8-வது சுற்று முடிவு வரை மொத்தம் 714 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதில், வீரர்கள் உற்சாக மிகுதியுடன் செயல்பட்டனர். 

9-வது சுற்றில் 50 வீரர்கள் களமிறங்கிய நிலையில், அவிழ்த்து விடப்பட்ட 67 காளைகளில், 8 மாடுகளை மட்டும் பிடிமாடுகளாக அறிவிக்கப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்றான, 10-வது சுற்றில் 59 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இறுதிச் சுற்று நிறைவடைந்த போது, மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் மொத்தம் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து அசத்தினார். இதேபோல, மதுரை மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி 2-ம் இடமும், சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மொத்தம் 840 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு 10 சுற்றுகளாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4:45 மணி அளவில் நிறைவுபெற்றது. 

Night
Day