விளம்பர திமுக அரசுக்கு புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்!

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்றிடாமல், வெற்று விளம்பரங்களை மட்டும் செய்து, ஆட்சியை நடத்தி வரும் திமுக தலைமையிலான அரசுக்கு, அ.இ.அ.தி.முக. பொதுச் செயலாளர் புரட்சித்தாய்  சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அ.இ.அ.தி.மு.க. குறித்து திமுகவினரின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவத்துள்ளதுடன், அ.இ.அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களில் திமுகவினர் தலையிடுவதை விட்டு மக்கள் பிரச்னைகளில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.முக. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்ட அறிக்கையில், 
தமிழ்நாட்டில் மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றிடாமல், வெற்று விளம்பரங்களை மட்டும் செய்து கொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு அ.இ.அ.தி.முக. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் கூட இல்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் காலிக் குடங்களுடன் போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது மிகவும், வேதனை அளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழகம், இன்று அமைதிக்காக ஏங்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் - இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள திமுக தலைமையிலான அரசோ, மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், வெற்று விளம்பரங்களை செய்து கொண்டு, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களை ஏமாற்றி எப்படியாவது வாக்குகளை பெற்றுவிடலாம் என்று பகல் கனவு காண்பது கடும் கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நம்மன்பட்டி கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், அதிலும் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுவிட்டதாக குற்றம்சாட்டி, அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனை அளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்ன ஆவூர் கிராமத்தில் 4 நாட்களாக குடிநீர் வராததால் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதையும், அவ்வழியாக பிரச்சாரத்திற்கு வந்த திமுகவினரை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளதையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 33 கிராம ஏரிகளையும், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு கால்வாய் திட்டத்தின் மூலமாக இணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அதில் மூங்கிலேரி பெரிய ஏரி மற்றும் புளியம்பட்டி நாகன்குட்டை ஏரியை மட்டும் இணைக்காமல் விட்டிருப்பதாக சொல்லி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் - கடந்த 2016-ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக் காலத்தில், இந்த 2 ஏரிகளையும் மேற்படி திட்டத்தில் இணைப்பதற்கு தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாக அதிகாரிகள் அரசுக்கு, ஆவணங்களை சமர்ப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் - எனவே, மூங்கிலேரி மற்றும் புளியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் வருகின்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க போவதில்லை என்றும், இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்து இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக, புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியாக கண்காணிக்கப்பட்டதன் விளைவாக, மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர் - இன்று, காவல் துறையினருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது - திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, கட்டுப்பாடு இல்லாமல் போய்விடும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் - நாள்தோறும் வழிப்பறி செயின் பறிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை, போதைப் பொருள் நடமாட்டம் உச்சத்தில் இருக்கிறது - இந்த தருணத்தில், தமிழக மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.  

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் எந்தஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனக் கூறி வாக்கு சேகரிக்க வந்த திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் விரட்டி அடித்துள்ளனர் - அதேபோன்று, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்கு கேட்டு செல்லும் திமுகவினரை பொதுமக்கள் கேள்வி கேட்பதும், விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடைபெறுவதை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை செய்திகள் மூலமாகவும் தெரிய வருகிறது - ஆனால், திமுக தலைவரும், அவரது கட்சியினரும் இதையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு, தங்கள் இயக்கத்தை பற்றி பேசி வருவது தேவையற்ற ஒன்று என அ.இ.அ.தி.முக. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வெளியிலிருந்து யாரும் வர தேவையில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அஇஅதிமுக இருக்காது என்றும் ஒரு சிலர் பேசி வருகின்றனர் - ஆனால் ஒன்றை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன், புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவால் பேணி பாதுகாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு அழிவே கிடையாது என்றும், அஇஅதிமுகவில் உள்ளே இருப்பவர்கள் நினைத்தாலும் சரி அல்லது வெளியே இருப்பவர்கள் முயற்சித்தாலும் சரி, யாராலும் அழித்துவிட முடியாது என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

புரட்சித்தலைவி அம்மா, சொன்னதைப் போன்று "இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அஇஅதிமுக இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்" என்பது உறுதி - இன்றைக்கு ஒரு சில மூத்த நிர்வாகிகளின் சுயநலப்போக்கால் இயக்கம் பிளவுப்பட்டு இருந்தாலும், தங்கள் இயக்கத்தில் உள்ள பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பது தனக்கு நன்றாக தெரியும் என்றும், அதற்கான நேரமும் நெருங்கிவிட்டது என்றும், "ஆடு நனையுதேனு ஓணான் அழுவுதுங்கிற கதையா" திமுகவினர் தங்கள் இயக்கத்தின் உள் விவகாரங்களில் தலையிடுவதை விட்டுவிட்டு, தமிழக மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுங்கள் என்றும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

இந்த 3 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்லி வாக்கு கேளுங்கள் - கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற திமுக உறுப்பினர்கள், தமிழக மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள் - அவ்வாறு ஏதாவது மக்களுக்கு நல்லது செய்து இருந்தால்தான் இப்போது அதை உங்களால் சொல்ல முடியும் - மக்களுக்கு ஏதும் செய்யாததால் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு கண்டதையும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் - எதிர்கட்சியினரிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் "பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும்" கதையாக திமுகவின் தலைவர், தனது வழக்கமான சித்து வேலைகளை செய்து பார்க்கிறார் - ஆனால், இது போன்ற சித்து வேலைகள் எப்போதும் பலிக்காது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என அ.இ.அ.தி.முக. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day