வீட்டின் முன் மதில்சுவர் கட்ட எதிர்ப்பு... தனி ஆளாக போராட்டத்தில் குதித்த பெண்...!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி அருகே மீனவ கிராமத்தில் ஊர்மக்கள் சேர்ந்து மதில்சுவர் கட்ட முயற்சித்தபோது தனது வீடு மறைக்கப்படுவதாக கூறி, பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதில்சுவரை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சோபி. இவரது வீடு அமைந்துள்ள பகுதியோடு இரவிபுத்தன்துறை ஊருக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட முடிவெடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இரவிபுத்தன்துறை ஊரை சேர்ந்தவர்கள் வந்தபோது, அதனை எதிர்த்து சோபி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இரவிபுத்தன்துறை ஊரை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு சோபியின் வீட்டின் முன் மதில்சுவர் கட்ட முயன்றதாக கூறப்படுகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோபி, வேலையாட்களை வேலை செய்யவிடாமல் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

சோபியின் போராட்டம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் சுமூக தீர்வு எட்டப்படாததால், ஆத்திரமடைந்த ஊர்மக்கள் வேலைக்கு தடங்கலாக அமர்ந்திருந்த சோபியை அப்புறப்படுத்திவிட்டு மதில்சுவர் கட்டும் பணியை தொடங்கினர். 

இதற்கிடையே கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் மண்ணை வாரி சோபி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எறிந்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதி கலவர பூமியாக மாறியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போலீசார் இரு தரப்பினரையும் காவல்நிலையம் அழைத்து சென்று கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வரும் 5ம் தேதி வரை மேற்கண்ட இடத்தில் எந்த வேலைகளையும் செய்யக்கூடாது என்றும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட இடத்தில் மதில்சுவர் கட்டுவதா?, வேண்டாமா என்பதை தீர்மானித்து கொள்ளலாம் என்றும் போலீசார் மற்றும் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இரண்டு தரப்பினரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர். வீட்டை மறைத்து மதில்சுவர் எழுப்பியதை கண்டித்து தனி ஒரு பெண்ணாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சின்னத்துறை மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Night
Day