மதுரை அருகே அதிகாலையில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை கத்தியால் கொடூரமாக தாக்கி 8 சவரன் தங்கச்செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலூர், ஸ்டார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தனது மனைவி சாய்லெட்சுமி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதிகாலை மாணிக்கம், நடைபயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி சாய்லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்டு அறிந்து கொண்ட மர்மநபர், சாய்லட்சுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். சாய்லட்சுமியின் முகத்தை துணியால் மூடி கத்தியால் சரமாரியாக தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அந்த மர்மநபர் தப்பித்துச் சென்றுள்ளார்.
சாய்லட்சுமியின் அலறல் சத்தம்கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். தலை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் கிடந்த சாய்லட்சுமியை மீட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் போலீசார், விசாரணையில் இறங்கினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிப்பிலும் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பாக தனிப்படை அமைத்து, மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை நேரத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், மர்மநபர் ஒருவர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.