எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் வேறு மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை வரும் 18ம் தேதிக்கு பின் இயக்க கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான காரணம் என்ன.. வேறு மாநில பேருந்துகளை இயங்குவதால் என்ன சிக்கல் என்பதை சற்று விரிவாக பார்கலாம்.
தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊர்களில் இருந்து படிப்பிற்காகவும், பணிபுரிவதற்காகவும் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு பயணிக்கும் மக்கள் அரசு சார்பில் இயக்கப்படும் எஸ்இடிசி பேருந்துகளில் பயணித்தாலும், போதிய பேருந்துகள் அரசிடம் இல்லாததால், கூடுதல் கட்டணம் செலுத்தி பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
பயணிகளின் பயணத்தை இனிமையாக்கவும், நீண்ட தூரம் உடல் அலுப்பில்லாமல் பயணிக்கவும் படுத்துக்கொண்டே பயணிக்கவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை அறிமுகப்படுத்தினர். அப்போது, தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் பதிவு செய்யும் வசதியில்லாததால் அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, நாகாலாந்து, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பேருந்துகளை பதிவு செய்து இயக்கி வந்தனர். இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தான் தமிழக அரசு படுக்கை வசதிகளை கொண்ட பேருந்துகளை தமிழகத்தில் பதிவு செய்து கொள்ளும் வகையில் விதிகளை மாற்றி அமைத்தது.
இந்நிலையில், தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், வெளிமாநில பதிவெண்களோடு இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிரடியாக அறிவித்திருந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, வரும் 18ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கு பின்னரும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளைத் தமிழ்நாட்டில் இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த அன்பழகன், தாங்கள் ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவிற்கு மாற்ற தயாராக இருப்பதாகவும், ஆனால் 80க்கு மேற்பட்ட போக்குவரத்து பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ள நிலையில் 35 சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் மட்டுமே பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார்.
500க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவு எண்ணுக்கு மாற்றப்படாமல் உள்ள நிலையில், பழைய நடைமுறையை நீக்கி எளிதில் ஆம்னி பேருந்துகளை பதிவு செய்யும் வகையில் புதிய நடைமுறையை தமிழக அரசு உருவாக்க வேண்டுமென ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் 18ம் தேதி முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் ரூபாய் அளவில் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.