வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. மழை ஓய்ந்தும் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

சென்னை கண்ணகி நகர் பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ள மழைநீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை கண்ணகி நகரில், சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வரும் நிலையில், அங்கு பெய்த கனமழையால், பிரதான சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்க கூடிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் சென்ற வாகனங்களும் பழுதாகி நின்றதால், அவைகளை தள்ளிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் யாரும் தங்களது பகுதிக்கு இதுவரை வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை சத்யா நகர், எழில் நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை ஓய்ந்த பின்பும் எவ்வித அடிப்படை வசதிகளும் இப்பகுதியில் மேற்கொள்ளாததால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு மத்தியில் இங்கு வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் சமைக்க கூட முடியாமல் 2 நாட்களாக பசியோடு வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால், பூரான் உள்ளிட்ட பூச்சிகளால் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்துவிடுமோ என்ற பயத்தோடு தூக்கம் இன்றி வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் இடுப்பளவிற்கு தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தில் தவித்த பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஜெயா ப்ளஸ் குழுவினர் அனுப்பி வைத்தனர். இவ்வாறான நற்செயலில் ஈடுபட்ட ஜெயா ப்ளஸ் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை சூளை பகுதியின் கேம் கார்டன் தெருவில் சூழ்ந்த மழைநீரால் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இடுப்பளவிற்கு தேங்கிய மழைநீரால் அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாத நிலையில் வீடுகளிலேயே தஞ்சம் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து புகாரளித்தும் மாநகராட்சி அதிகாரிகளும், தொகுதி எம்எல்ஏ, கவுன்சிலர் உள்ளிட்டோரும் நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களின் உயிரில் விளையாடுவதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.  

சென்னை சூளை அருகேயுள்ள தட்டாங்குளம் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்துள்ள மழைநீரால், அத்தியாவசிய பொருட்களுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் வீடுகளுக்குள் சூழ்ந்த மழைநீரால், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி வாசிகள் குமுறுகின்றனர். இதுவரை அதிகாரிகள் ஒருவர் கூட தங்களின் நிலை குறித்து அறிந்துகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர். 

சென்னை சூளை பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் ஏராளமான மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளது. மழை நின்ற பிறகும் பல வீடுகளில் தண்ணீர் வடியாததால், மாற்று துணிக்கூட இன்றி அவதியுற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் என எதுவும் கிடைக்காமல் கடந்த இரண்டு நாட்களாக அவதியுற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை பள்ளிக்கரணை பசும்பொன் நகரில் உள்ள குடியிருப்புகளை கடந்த இரண்டு நாட்களாக மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், வீடுகளைவிட்டு வெளியேற முடியாமலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மழைநீருடன் கலந்து கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை கொரட்டூர் பகுதியின் 3 முக்கிய பிரதான சாலைகள் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளகாடாக காட்சி அளிப்பதால், வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் அவதியுற்ற பொதுமக்கள், படகு மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் பிரதான சாலை என்பதால் அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை வள்ளூவர் கோட்டம் பகுதியில் கடல்போல் தேங்கியுள்ள மழைநீரால் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மழைநீருடன், கழிவுநீரும் கலந்திருப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். பல மணி நேரமாக தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

சென்னையில் தொடர் மழை அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் இருபுறமும் நிறுத்தியுள்ளனர். இதனால் குறுகிய சாலையாக காட்சியளிக்கும் மேம்பாலத்தில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். தாம்பரம் அடுத்த அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்கப்பட்டு பெருங்களத்தூர் மண்டல அலுவலகம் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாமில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மெழுகு வர்த்தி கூட இல்லாத நிலையில் கைக் குழந்தையுடன் மக்கள் அவதியுற்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் அலட்சியத்துடன் பதில் அளிப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தொடர் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் போதிய காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
l


Night
Day