எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேங்கை வயல் வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 3 பேர் குற்றவாளிகள் என கூறப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் என கூறியுள்ள முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறியுள்ளார்.
பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மனித கழிவு கலந்ததாகத்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அவ்வழக்கில் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவத்தார்.
எனவே, சி.பி.சி.ஐ.டி அளித்த குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துவதாகவும் கூறினார்.
இவ்வழக்கில் ஆரம்பம் முதலே பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக காவல்துறை நடந்து கொண்டதாகவும், அதனால் மட்டுமே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகவும், இருப்பினும் குற்றவாளிகளை கண்டறிவதில் சிபிசிஐடி மெத்தனமாகவே இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமோ என்ற பயத்தில் இவ்விதமான குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ள திருமா, உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோகத்தோகோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது எனவும் கூறினார்.
எனவே சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என வலியுறுத்துவதாகவும் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.