எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேங்கைவயல் விவகாரத்தில் புதிய திருப்பமாக சிபிசிஐடியால் குற்றம்சாட்டப்பட்ட சுதர்சன், முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த வேங்கைவயல் சம்பவம் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்சன், முரளிராஜா மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் சுதர்ஷ்ன் மற்றும் அவருடைய தாய் சுலோச்சனா உரையாற்றும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என தாய் சுலோச்சாவிடம் கூறும் சுதர்ஷன், நான் அழைக்கும்போது பேசினால் போதும் என கூறுகிறார். மறுமுனையில் இருந்து சுலோச்சனா கூறுகையில், ஒருபோதும் உண்மையை ஒத்துக்கொள்ளாதே, அடிச்சாலும் ஒத்துக்கொள்ளாதே என சுதர்ஷனிடம் கூறுவது இடம்பெற்றுள்ளது.
இதேபோல் குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்ஷனும், அவருடைய அத்தை வள்ளிக்கண்ணுவும் பேசும் ஆடியோவும் இணையத்தில் வைராகி வருகிறது. அதில் முரளி ராஜை குற்றவாளி என போலீசார் சந்தேகிப்பதாக சுதர்ஷன் கூறுகிறார். மறுமுனையில் இருந்து வள்ளிக்கண்ணு கூறுகையில், வேளை ஏதேனும் பறித்துவிடுவார்களா என சுதர்ஷனிடம் கேட்பது இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற ஆடியோ மற்றும் வீடியோக்கள் வெளிவராத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அன்றே இதுபோன்ற சாட்சியங்கள் வெளிவந்துள்ளதால், வழக்கை திசை திருப்ப சிபிசிஐடி போலீசார் முயல்கிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.