எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாகவும், முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குற்றம் புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையில் சிபிசிஐடி விசாரணை முடிவடைந்து புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.