எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் அறிவிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு, 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரசாரத்தில் இறங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் மட்டுமே வேட்பாளர் பட்டியலை முழுவதும் வெளியிடாமல் இருந்தது.
இதனிடையே, நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் தொகுதிக்கு சசிகாந்த் செந்தில், கரூர் தொகுதிக்கு ஜோதிமணி, விருதுநகர் தொகுதிக்கு மாணிக்கம் தாகூர், சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம், கன்னியாகுமரி தொகுதிக்கு விஜய் வசந்த், கடலூர் தொகுதிக்கு விஷ்ணு பிரசாந்த், கிருஷ்ணகிரி தொகுதிக்கு கோபிநாத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக களக்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை அறிவிக்கக்கூடும் என்ற தகவல் பரவியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி பாத யாத்திரை துவங்கியபோது, களக்காடு பகுதியில் ராகுல் காந்தியின் பிளக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது எனக் கூறி பால்ராஜ் அதை கிழித்ததாக ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பால்ராஜ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்ததாகவும், இவருக்கு சீட்டு கொடுத்தால் இவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் சாடியுள்ளனர்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பால்ராஜை அறிவிப்பதற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சியினர் இரண்டு கோஷ்டிகளாக மோதி கொள்ளக்கூடிய சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே ரூபி மனோகரன் தனது ஆதரவாளர்களை திரட்டி, தனது மகனுக்கு சீட்டு வழங்க வேண்டும் என தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், திருநெல்வேலி தொகுதியில் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமைக்கும் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், பொருளாதார நிபுணருமான பிரவீன் சக்கரவர்த்தியின் பெயர் முதன்மையாக உள்ளது. அதேநேரம், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் எம்பியுமான மணிசங்கர் ஐயரின் மகளும் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதனால், மயிலாடுதுறை தொகுதியிலும் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு கண்டு, மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.