எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேலூரில் தனது மகன் கதிர் ஆனந்துக்காக வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் துரைமுருகனை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்திற்கு தன் சார்ந்த சமூக மக்களிடத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சாலையை வழிமறித்து ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். 5 ஆண்டுகளாக வராத எம்.பி. இதுவரை என்ன செய்தார் என்று கூறி கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் நேற்று முன்தினம் கார்த்திக் சிதம்பரத்திற்கும் அவரது எதிரணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அந்த பிரச்சாரத்தை ரத்து செய்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் மீண்டும் அந்த பகுதிக்கு சென்றார். அப்போதும் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் நிலவியதால் பல்வேறு கிராமங்களில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு வேறு பகுதிக்கு கார்த்தி சிதம்பரம் நடையை கட்டினார்.
திமுகவுக்கு வாக்களித்து அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றவில்லை என வாக்காளர்கள் சரமாரியாக குற்றம் சாட்டியதால் தென்காசியில் வேட்பாளர் உள்ளிட்ட திமுகவினர் ஓட்டம் பிடித்தனர். தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ராஜபாளையம் அருகே உள்ள அருள் புத்தூர், புத்தூர், காமராஜர் நகர், பாரதி நகர், நல்லமங்கலம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திமுகவுக்கு குடும்பத்துடன் வாக்களித்ததற்கு இதுவரை குடிநீர், சாலை வசதி செய்து தரப்படவில்லை என கூறினர். தொடர்ந்து எழுந்த எதிர்ப்பபை சமாளிக்க இயலாமல் அந்த இடத்தில் இருந்து வேட்பாளர், எம்எல்ஏ உள்ளிட்டோர் ஓட்டம் பிடித்தனர்.
பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் திமுக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாக பொய் செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புவதை தடுத்து நிறுத்த கோரி தேர்தல் ஆணையத்திலும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் தேசிய ஜனநாயக கூட்டணி வழக்கறிஞர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.