எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை முழுவதும் பொய்களும் புரட்டுகளுமாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
விளம்பர திமுக அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் குறித்து, தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் 2022-2023 ஆம் ஆண்டில் மொத்த சாகுபடிப் பரப்பு 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்த திமுக அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருப்பதன் மூலம் சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது உண்மையாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை மறைக்க நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பாஜக கூறியது இன்றைய வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் ஆயிரத்து 774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் உண்மையாகியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்ட நிலையில், திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதனிடையே வேளாண் துறையில் மத்திய அரசு அமல்படுத்திய திட்டங்களையே திமுக அரசு செயல்படுத்துவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 2025-26 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்றும், அந்த திட்டங்கள் அனைத்தையும் எடுத்து திமுக அரசு செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.