எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாமக்கல் அருகே மதுபோதையில் காரை ஓட்டிச்சென்று இளம்பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இளைஞர்களுக்கு ஊர் மக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவர், தனது ஸ்கூட்டியில், குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேபோல் சமய சங்கிலி பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் மூக்கு முட்ட குடித்துவிட்டு, காரில் அதிவேகமாக குமாரபாளையம் நோக்கி சென்றுள்ளனர். குமாரபாளையம் மேம்பால சாலை அருகே வந்தபோது பார்வதி சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியை முந்திச்செல்ல நினைத்த இளைஞர்கள், காரை அதிவேகமாக செலுத்தியுள்ளனர். ஸ்கூட்டியை முந்தி வேகமாக சென்ற கார், கண்ணிமைக்கும் நேரத்தில் பார்வதி சென்ற ஸ்கூட்டி மீது வேகமாக மோதியது.
இதில் இருசக்கர வாகனத்துடன் பார்வதி கீழே விழுந்ததை பார்த்த இளைஞர்கள், பதற்றத்தில் காரை நிறுத்தாமல் வேகம் எடுக்க, சற்றுதூரம் சென்றவுடன் கார் நின்றுள்ளது. இதனையடுத்து காருக்குள் இருந்த இரண்டு இளைஞர்கள், காரை விட்டு இறங்கி அங்கிருந்து தப்பியோடினர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்து கிடந்த பார்வதியை மீட்டு, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் இளைஞர்களிடம் விசாரித்ததில் அவர்கள் 'ஃபுல் போதையில்' காரை ஓட்டி வந்து, விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்தது மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை இடித்து கீழே தள்ளிவிட்டது தெரிந்து கோபமடைந்த அப்பகுதி மக்கள், மது மயக்கத்தில் இருந்த இளைஞர்களை சூழ்ந்துகொண்டு தர்மஅடி கொடுத்தனர்.
தகலறிந்து வந்த குமாரபாளையம் காவல்துறையினர், பொதுமக்களிடமிருந்து இரண்டு இளைஞர்களையும் மீட்டு காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பார்வதி, சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் நான்கு இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதேபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறியதால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் சிக்கிய இளைஞர்களை சுலுக்கெடுத்து அனுப்பியுள்ளனர்.