எழுத்தின் அளவு: அ+ அ- அ
எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை, தொகுப் பக்கமே தலைகாட்டுவதில்லை, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என வாக்காளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு.... பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த தொகுதியின் தற்போதைய அவலநிலை குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு ......
voice over
சிறப்பு பொருளாதார மண்டலம். மிகப் பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள், மீனம்பாக்கம் விமான நிலையம், மேப்ஸ் ஏற்றுமதி மண்டலம், ராஜீவ்காந்தி நினைவிடம் இருங்காட்டுகோட்டை கார் பந்தய மைதானம் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதுதான் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி...
1967ம் ஆண்டு அறிமுகம் ஆன ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி, தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டது. 22 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளனர். இந்த மக்களவை தொகுதி மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியில் திமுக 9 முறையும், காங்கிரஸ் மற்றும் அஇஅதிமுக ஆகிய கட்சிகள் தலா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த முறை வெற்றி பெற்று எம்.பி.யான திமுகவை சேர்ந்த டி.ஆர் பாலு, இந்த முறையும் பெரும்புதூரில் களமிறங்கியுள்ளார். கடந்த முறை பெற்ற வெற்றியின் நம்பிக்கையில் போட்டியிடும் அவருக்கு இந்த முறை கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தல் களம் அவருக்கு எதிராக மாறியிருப்பதற்கு வரிசை கட்டி நிற்கின்றன பல்வேறு காரணங்கள்.
இதில் முதல் குற்றச்சாட்டாக இருப்பது கடந்தமுறை அளித்த வாக்குறுதிகளை திமுக எம்பியான டி.ஆர்.பாலு நிறைவேற்றவில்லை என்பதுதான். ஒன்றா, இரண்டா, இந்த பட்டியல் மிக நீளம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
முக்கியமாக தாம்பரத்தை அடுத்த பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பம்மல் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடியாமல் அரைகுறையாக உள்ளன. பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் அடிக்கடி விபத்துகளால் சில சமயங்களில் உயிர் சேதங்கள் கூட ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
அடுத்து முக்கிய குற்றச்சாட்டாக இருப்பது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி தராதது என்கின்றனர் வாக்காளர்கள். தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை டி.ஆர். பாலு கண்டுகொள்ளவில்லை என்பதுதான் அவர்களின் ஆதங்கம். அடுத்து தாம்பரம் பகுதியில் வாடிக்கையாகிவிட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை என்பதும் பெரும் குறையாக இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி நீர்நிலைகள் துர்வாரப்படாமல் இருந்து வருவதும் தொகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
பொதுமக்கள் மட்டுமின்றி, சொந்த கட்சியினரே டி.ஆர்.பாலு மீது கடும் அதிருப்தியில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல முறை எம்பி-யாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த டி.ஆர். பாலு, சொந்த கட்சியினரையே மதிப்பதில்லை என்ற குமுறலும் பூதாகரமாக வெடித்துள்ளது. கட்சிக்காரர்களையே சந்திக்காத டி.ஆர். பாலு, பொது மக்களை எப்படி சந்திக்கப் போகிறார், குறைகளை தீர்க்கப் போகிறார் என்ற அதிருப்தியும் அதிகமாகவே உள்ளது.
ஒட்டு மொத்தத்தில், எம்.பி.யாக உள்ள டி.ஆர்.பாலு, மக்களுக்காக எந்த பணியும் செய்யவில்லை என்பதே தொகுதி மக்களின் பெரும் ஆதங்கமாக உள்ளது. அடிப்படை வசதிகள் நிறைவேற்றாதது, தொகுதி மக்களின் குறைகளை தீர்க்காதது என பல்வேறு அதிருப்திக்கு ஆளாகி இருக்கும் டி.ஆர்.பாலுவுக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்பதே நிதர்சனம். இந்த முறை தொகுதியை டி.ஆர். பாலு தக்க வைப்பதும் சந்தேகமே என்பதே உண்மையான கள நிலவரம்.