எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுகவும், காங்கிரசும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கச்சத்தீவை வேறு ஒரு நாட்டுக்கு ரகசியமாக தாரை வார்த்ததால் தமிழக மீனவ மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழகத்தின் உயிர்நாடியான கச்சத்தீவை திமுகவும், காங்கிரசும் வேறொரு நாட்டுக்கு ரகசியமாக தாரைவார்த்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும், திமுக, காங்கிரஸ் செய்த இந்த பாவச்செயலால் நமது மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். கச்சத்தீவு ரகசியமாக தாரைவார்க்கப்பட்டதை பாஜகதான் அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்மொழிக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தருவது குறித்து பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்ற கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். வீரமங்கை வேலுநாச்சியார், சுதந்திர போராட்ட வீரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்கள் என வீரமிக்க தமிழர்கள் இங்குதான் இருந்தார்கள் என்று கூறிய பிரதமர் மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வ.உ. சிதம்பரம் பிள்ளை உட்பட இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பலரும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பெருமிதம் தெரிவித்தார். வரலாற்று பெருமைமிக்க செங்கோல், தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு ஆகியவற்றை திராவிடத்தின் பெயரால் திமுக, காங்கிரஸ் எதிர்த்தது என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆரின் பாரம்பரியத்தை திமுக அவமதிக்கிறது என்றும், ஜெயலலிதா அம்மாவை திமுக அவமதித்ததை யாராலும் மறக்க முடியாது என்றும் கூறினார்.
போதை மருந்துகளால் தமிழகம் மிகப் பெரிய சோகத்தில் இருந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, போதை பழக்கத்தால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். போதைப்பொருள் மாஃபியாக்கள் எல்லோரையும் யார் காப்பாற்றுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், போதை வணிகத்தோடு போராடி, அதனை இந்த நாட்டை விட்டே விரட்டுவோம் என உறுதி அளிக்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.