எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 91 புள்ளி 55 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். முதல் முறையாக தமிழிலும், அதிகப்படியாக கணிதத்திலும் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவியரும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களும் என மொத்தமாக 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.
அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம், 91 புள்ளி 55 சதவீதமாக உள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேரும் , மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி மாணவர்கள் 88 புள்ளி 58 சதவிகிம், மாணவிகள் 94 புள்ளி 53 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அதிகப்படியாக கணித பாடத்தில் 20 ஆயிரத்து 691 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். தமிழ் பாடத்தில் 8 பேர், ஆங்கிலத்தில் 415 பேர், அறிவியலில் 5 ஆயிரத்து 104 பேர் மற்றும் சமூக அறிவியலில் 4 ஆயிரத்து 428 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சதமடித்துள்ளனர்.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் அரசு பள்ளிகள் 87.90 சதவீதம் அரசு உதவி பெறும் பள்ளி 91.77 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதம் என தேர்ச்சி சதவீதம் உள்ளது. இதேபோன்று இருபாலர் பள்ளிகள் 91.93 சதவீதம், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடத்தில் 96.85 சதவீதம், ஆங்கிலம் 99.15 சதவீதம், கணிதம் 96.78 சதவீதம், அறிவியல் 96.72 சதவீதம் மற்றும் சமூக அறிவியலில் 95.74 சதவீதம் பாடவாரியாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் 97 புள்ளி 31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், 97 புள்ளி 02 சதவீதம் தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 96 புள்ளி 36 சதவீதம் தேர்ச்சியுடன் ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதேபோன்று 96.24 சதவீத தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் 4-ஆம் இடத்திலும், 95.23 சதவீதம் தேர்ச்சியுடன் திருச்சி மாவட்டம் 5-ஆம் இடத்திலும், 95 புள்ளி 14 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் 6வது இடத்திலும் உள்ளது.
82 புள்ளி 07 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
இதேபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் அதாவது 92 புள்ளி 45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதேபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 260 சிறைவாசிகளில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி விகிதம் 87 புள்ளி 69 சதவீதமாக உள்ளது.