எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாட்டில் இன்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி பாடத் தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. முதல் நாள் தேர்வாக மொழிப் பாட தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்து 518 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. அவர்களில் 11 ஆயிரத்து 430 மாணவ மாணவிகள் இன்றைய தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை 65 ஆயிரத்து 641 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழ் மொழிப் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளைத் தவிர அனைத்து கேள்விகளும் மிக எளிதாக இருந்ததாக சென்னையில் தேர்வெழுதிய மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டத்தில் தேர்வு முடிந்த பின்னர் வெளியே வந்த மாணவிகள் கேள்விகள் எதிர்ப்பார்த்தவாறு அமைந்திருந்ததாக தெரிவித்தனர். அதே வேளையில் குறுவினாவில் ஒரு சில கேள்விகள் கடினமாக இருந்ததாக தெரிவித்த மாணவிகள், இலக்கணப் பகுதி கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவ மாணவிகளும், தமிழ் மொழிப்பாடத் தேர்வு மிக எளிமையாக இருந்ததாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.