144 பயணிகளுடன் விமானம் பத்திரமாக தரையிறங்கியது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நடுவானிலையே இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக விமானம் வட்டமடித்தது. விமானியின் சாமர்த்தியத்தால்  141 பயணிகளுடன் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானம் கிளம்பியது முதல் தரையிறங்கியது வரையிலான திக் ... திக் ... நிமிடங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு ...

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 141 பேருடன் பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று, நேற்று மாலை 5.40 மணிக்கு சார்ஜா புறப்பட்டது. ஓடுபாதையை விட்டு விமானம் மேல் எழுந்தவுடன் அதன் சக்கரங்கள் உள் இழுக்கப்படவில்லை. விமானம் மேல் எழும்பிய சில நிமிடங்களில் அதை அறிந்த பைலட், உடனடியாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்க திட்டமிட்டார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை உடனடியாக தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்ன. அதன்படி விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு அதன்பின்னர், தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் எரிபொருளை தீர்ப்பதற்காக விமானம் வானிலையே வட்டமடிக்கத் தொடங்கியது. ஒருபுறம் சக்கரங்களை மீண்டும் இயக்க வைக்கவும் முயற்சிகள் நடைபெற்றது.

இது ஒருபுறம் இருக்க, விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை திருச்சி விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், வானில் விமானம் வட்டமடிப்பதை கேள்விப்பட்ட பயணிகளின் உறவினர்கள், உயிரைக் கையில் பிடித்துக் கொண்ட பதற்றத்துடன் வானத்தையே பார்த்தபடி இருந்தனர். அவர்களுக்கு இந்த நிலை என்றால், நடுவானில் சுற்றி சுற்றி வந்த விமானத்தில் இருந்த பயணிகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

நேரம் செல்லச் செல்ல பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது, அனைத்து  ஊடகங்களின் பார்வையும் திருச்சி விமான நிலையத்தின் பக்கம் திரும்ப, அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. இரவு எட்டரை மணிக்கெல்லாம் சார்ஜா சென்றடைந்திருக்க வேண்டிய விமானம், திருச்சி அன்னவாசல், ராப்சல் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுக்கோட்டை வான் பகுதியிலும் இரண்டரை மணி நேரமாக 26 முறை வானில் வட்டமடித்தபடி இருந்தது.

அடுத்து என்ன அடுத்து என்ன என்ற திக் திக் நிமிடங்கள் உருண்டோட, ஒருவழியாக 8.15 மணிக்கு விமானம் திட்டமிட்டபடி திருச்சி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அனைவருடைய பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே, ஓடு பாதையில் இறங்கிய விமானம் எந்த பிரச்னையுமின்றி ஓடி நின்றது.

அசம்பாவிதமும் இல்லாமல் விமானம் தரையிறங்கியதை பார்த்த அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விமானத்தில் இருந்தவர்களும் அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் விமானம் தரையிறங்கியதை பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

உடனடியாக விமானத்தில் இருந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் நடுவானில் வட்டமடித்தது முதல் பத்திரமாக தரையிறங்கிய நொடி வரையில் பயணிகளுக்கு ஏற்பட்ட பதைபதைப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

Night
Day