2ஜி அலைக்கற்றை ஊழலில் பெரும்பங்கு வகித்தது திமுகதான் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் துடைதெறியப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், 2ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது திமுக தான் என்று குற்றம்சாட்டினார். 

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணியால் தமிழகத்திற்கு எந்த ஒரு வளர்ச்சித் திட்டங்களையும் கொடுக்க முடியாது எனத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பது தான் திமுக - காங்கிரசின் ஒற்றை இலக்கு என பிரதமர் குற்றம்சாட்டினார்.

ஆப்டிகல் பைபர், 5ஜி போன்ற டிஜிட்டல் இந்தியாவுக்கான பணிகளை பாஜக செய்ததாகக் கூறிய பிரதமர் மோடி, ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல் மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இந்தக் கொள்ளையில், திமுகவுக்கு பெரும் பங்கு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் தமிழரின் பெருமைய பறைசாற்றும் செங்கோலை நிறுவுவதற்கு கூட திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தமிழ்நாட்டின் அரக்கன் திமுக தான் என்றும் தமிழர்களின் பண்பாட்டிற்கு திமுக தான் முதல் எதிரி என்றும் கடுமையாக விமர்சித்தார்.



Night
Day