2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்வு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2.05 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். 

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்லும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பிற்பகல் 2.45 மணியளவில் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதன் பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி, அங்கு டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் 'டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் பார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ.' என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அன்று இரவு மதுரை பசுமலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கும் அவர், அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து  28-ம் காலை மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமர், காலை 9.30 மணிக்கு வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட திட்டப் பணிகளைத் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து காலை 11.05 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி செல்லும் பிரதமர், காலை 11.15 மணிக்கு அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். பின்னர், பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து டெல்லி திரும்புகிறார். பிரதமர் வருகை தரும் இடங்கள் மற்றும் வழித்தடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Night
Day