எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடந்த 2004ம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமியால், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கோர சம்பவம், இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. சுனாமியால் உயிரிழந்தோருக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளில் சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியது. இவற்றின் பாதிப்பு தமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளான சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் எதிரொலித்தது. சுனாமி தாக்குதலால் தமிழகத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும், அவர்களை எண்ணி இன்று வரை தவித்து வருகின்றனர். இயற்கைப் பேரழிவு நிகழ்ந்து இன்றுடன் 20ம் ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக்கொண்டு சுனாமியில் உயிரிழிந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், கடற்கரையில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார். இதற்கு முன்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மேற்கொண்ட அமைதி ஊர்வலத்திலும் தமிழக ஆளுநர் கலந்துக்கொண்டார்.
கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கடலை அமைதிப்படுத்தும் விதமாக கடலில் பால் ஊற்றியும், மஞ்சள் தெளித்தும், மலர் தூவியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மீனவர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் கடல் மாதாவிற்கு பால் ஊற்றியும் வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான மீனவர்கள், ஒரே இடத்தில் தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல மனக்குடி கடற்கரையில் உள்ள கல்லறையில் மெழுகுவர்த்திரி ஏந்தி கண்ணீர் மல்க மீனவ பெண்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்கு முன்பாக ஏராளமான பொதுமக்கள் இணைந்து கடற்கரை பகுதியில் அமைதி பேரணி நடத்தினர்.
சுனாமியால் உயிழந்தவர்களுக்கு வேளாங்கன்னி பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். மேலும் கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தியடி, கடற்கரையில் அமைதிப் பேரணியில் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.