224 கல்லூரியில் போலி பேராசிரியர்கள்... ஷாக் தரும் அண்ணா பல்கலை. முறைகேடு

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் 224 கல்லூரிகள், வேறு, வேறு கல்லூரிகளில் பணிபுரியும் PHD பட்டம் பெற்ற பேராசிரியர்களை தங்களது கல்லூரிகளில் பணிபுரிவது போல் கணக்கு காண்பித்து அவர்களது பெயரில், குறைந்த ஊதியத்திற்கு தகுதியற்ற பேராசியர்களை பணிக்கு அமர்த்தியது அம்பலமாகியுள்ளது. கல்லூரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளது உண்மைதான் எனவும் சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்கள் மீது தீவிர நடவடிக்கை தீவிர எடுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் எச்சரித்துள்ளார். இது குறித்து ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

நாட்டிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 433 பொறியியல் கல்லூரிகளும், 2 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் உள்ளன. ஆனால், கடந்த சில காலமாகவே பொறியியல் படித்து வெளியே வரும் மாணவர்களுக்கு சரியான வேலை என்பது கிடைக்காத சூழலே நிலவி வருகிறது. இதற்கு வேலையில்லா திண்டாட்டம் என கூறப்பட்டாலும் பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் போதிய திறமை இல்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டு தான் வருகிறது.

இப்படி, போதிய திறமை இல்லாத மாணவர்கள் உருவாவதற்கு அடிப்படையில் திறமையான தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் சரியான உட்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகள் தான் காரணம் என கல்வியாளர்கள் குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரி அங்கீகார ஊழல்.

இந்த ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் பல தரவுகள் வெளியிடப்பட்டது. அந்த தரவுகளின் படி, அண்ணா பல்கலைக் கழகத்தின் CAI (Affiliation Inspection Committee) கடந்த 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடி செய்துள்ளதாகவும், 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் 224 கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக வேலை செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்து மோசடி செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்று 972 முழுநேர பேராசியர் இடங்கள் மோசடியாக நிரப்பியதை அங்கீகரித்து மோசடி செய்துள்ளதும், ஒரு முழு நேர பேராசிரியர் பல கல்லூரிகளில் இருப்பது மொத்தமாக 224 கல்லூரிகளில் நடந்துள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே அந்த 2023-24-ல் குழுவை ஏற்படுத்தி ஆய்வை மேற்கொண்ட அப்போதைய CAI இயக்குநர் இளையபெருமாள், Inspection Committee உறுப்பினர்கள், 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் விவரங்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீதும் கல்வி நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த துணைவேந்தர் வேல்ராஜ், ஆதார் எண்களில் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளில் முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான் என்றும், ஆதார் எண்களில் மாற்றம் செய்து ஒரே நபர் 32 கல்லூரிகளில் போலியாக வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் துணைவேந்தர் வேல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வு நடத்த அமைக்கப்பட்டுள்ள CAI குழு, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை, கல்வியின் தரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் அந்த கல்லூரியில் படித்தால் சிறப்பாக இருக்குமா ? என மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டிய குழுவே, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. எனவே அந்தக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் என அனைவரின் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.


Night
Day