எழுத்தின் அளவு: அ+ அ- அ
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது நாளாக இன்று தியானம் மேற்கொண்டு வருகிறார்.
2014 முதல் மக்களவைத் தேர்தல் முடிவடையும் நேரத்தில் முக்கிய இடங்களுக்குச் சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தமுறை கன்னியாகுமரி வந்துள்ளார். நேற்றுமுன்தினம் பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்த அவர் கடலில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தைத் தொடங்கினார். முதல் நாளில் 5 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்ட அவர் 2-ம் நாளான நேற்று விவேகானந்தர் பாறையில் இருந்து சூரிய உதயத்தை தரிசித்த பின்னர், ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில், 3வது நாளான இன்று காவி உடை அணிந்து கையில் ருத்ராட்ச மலையுடன் பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தின் வெளியே நடைப்பயிற்சி மேற்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தார்.
தொடர்ந்து, விவேகானந்தர் திருவுருவச்சிலைக்கு மலர்கள் வைத்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, சிலையை வலம் வந்து வணங்கினார். பின்னர், விவேகானந்தர் சிலை முன்பு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.
இன்று பகல் 1 மணி அளவில் மூன்று நாள் தியானத்தை முடித்துக் கொள்ளும் அவர் மீண்டும் சுவாமி விவேகானந்தரை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து தனி படகு மூலம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று திருவள்ளுவரின் பாதத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் கரைக்கு வரும் அவர் கார் மூலம் கடற்கரை சாலையில் உள்ள காந்தி நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு மகாத்மா காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் மலர் தூவி மரியாதை செய்கிறார். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார். இதனிடையே மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடியின் சூரிய வழிபாடு, கங்கா வழிபாடு மற்றும் தியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.