எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழகத்தை சேர்ந்த 4 ஆசிரியர்கள் உட்பட 82 பேருக்கு தேசிய ஆசிரியர்கள் விருதை வழங்கி கௌரவித்தார்.
டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அவரை கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதிலிருந்தும் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கி வருகிறது. நாட்டில் ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பை கொண்டாடும் வகையிலும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பினால் கல்வியின் தரம் மேம்பட்டது மட்டுமல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையை உயர்ந்துள்ளது. இப்படி நாட்டின் கல்வித் தரத்திற்காகவும் மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் 82 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆசிரியர் விருதை வழங்கினார்.
டெல்லியில் உள்ள விக்யான் பவனின் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ஆசிரியர்களுக்கு தேசிய விருதை வழங்கினார். இதில் தமிழகத்தை சேர்ந்த 4 ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் கோபிநாத் , மதுரை டிவிஎஸ் உயர்நிலை பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் , சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் உதவி பேராசிரியர் டாக்டர் காந்திமதி , சென்னை சவிதா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ஸ்மைலினி கிரிஜா உள்ளிட்ட நான்கு பேரும் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றனர்.