5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழக மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடுமெனவும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day