எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூரில் 5 வயதாகியும் தலை நிற்காமல், நடக்க முடியாமல் இருக்கும் பெண் குழந்தைக்காக மருத்துவ நிதி உதவியை எதிர்நோக்கியுள்ளனர் ஏழை பெற்றோர்... குழந்தையை குணப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் நாராயண சாமி. டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது 5 வயது மகள் பிறந்த போது நன்றாக இருந்த நிலையில், திடீரென உடல்நிலை சரியில்லாமல் வயிற்று வலி ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஒரு மாதம் சிகிச்சைக்கு பின்னர் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர் பெற்றோர்.
சிகிச்சைக்கு பின்னரும், நாளடைவில் குழந்தைக்கு தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக சென்றுவிட்டதால் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக குழந்தைக்கு அவ்வப்போது சிகிச்சை அளித்து வரும் நிலையில், குழந்தையின் மருத்துவ செலவிற்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் தந்தை நாராயணசாமி, தான் கூலி வேலை மட்டுமே செய்து வருவதால், இதற்கு மேல் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்பாடாத நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வீரவா நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயாராக இருப்பதாகவும், அதற்கு உண்டாகும் மருத்துவ செலவிற்கு, போதிய நிதி வசதி இல்லாததால், குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என தந்தை நாராயணசாமி தெரிவித்துள்ளது வேதனையடைய செய்துள்ளது.

குழந்தையை பழைய நிலைக்கு கொண்டு வர பிசியோதெரபி செய்து வந்த பொழுது, இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதால், அதனை நிறுத்திவிட்டதாகவும், குழந்தையை குணப்படுத்த நிதி உதவி கேட்டு, பாதிக்கப்பட்ட குழந்தையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெற்றோர், ஆட்சியர் தங்கவேலிடம் குழந்தையின் நிலையை எடுத்துரைத்து மனு அளித்தனர்.
மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நிதி உதவி அளிக்குமாறு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தையின் நிலையை கண்டு தினம் தினம் ரத்த கண்ணீர் வடிக்கும் பெற்றோருக்கு விடிவு காலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....