75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

75-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியதை செலுத்தினார்.

குடியரசு தின விழா ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்த பகுதியில் தற்போது மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு 75-வது குடியரசு தினவிழா உழைப்பாளர் சிலை அருகில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி உள்ளிட்டோர் அணி வகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்தினர். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம் உள்ளிட்டவைகள் அணிவகுத்து கொண்டு வரப்பட்டன.

தொடர்ந்து மேடைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராணுவ படைப்பிரிவு, கடற்படை, ராணுவம், விமானப்படை, சி.ஐ.எஸ்.ப்., சி.ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரண படை, கடலோர பாதுகாப்பு குழு, ஊர்க்காவல் படை உட்பட 41 படைப்பிரிவினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியின் அடுத்ததாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ராணி மேரி கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ், சோகா இகேதா கல்லூரிகளின் நடனங்கள் அரங்கேறின. அதேபோல் சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா, லூர்து மேரி, வள்ளியம்மாள் மேல்நிலை பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி கண்கவர்ந்தன.

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், கர்நாடக பழங்குடியினரின் சித்தி நடனம், மணிப்பூரின் லாய் ஹரோபா நடனம் மற்றும் மதுரையை சேர்ந்த குழுவினர் கைச்சிலம்பாட்டம், கரகாட்டம், மையாண்டி மேளம், பறை இசை ஆகிய நிகழ்ச்சிகள் அங்கு கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தின.

தொடர்ந்து அலங்கார ஊரிர்களின் அணிவகுப்பு நடைபெற்றன. மங்கல இசையுடன் செய்தி மக்கள் தொடர்பு துறை அலங்கார ஊர்தி உள்ளிட்ட 22 துறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக சென்றன.

varient
Night
Day