எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் அரசு பள்ளியில் ஆசிரியரின் பணம் மாயமான புகாரில் பள்ளி மாணவனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
நெல்லை வடக்கு அரியநாயகிபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியின், ஆசிரியையான காயத்ரி தேவி என்பவரின் 3 ஆயிரத்து 500 ரூபாய் கடந்த வாரம் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் மாணவனை அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் மாணவன் மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில், என்ன செய்வதென்று தெரியாத போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசாரோ மாணவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பெண் காவலர் ஒருவர் மாணவனை பைக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் மாணவரை அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யக்கூறி தொந்தரவு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது மகனை தாக்கிய தலைமை ஆசிரியை மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளி மாணவனை தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தாக்கினார் என்பது விசாரணையில் தெரியவந்தால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.