எழுத்தின் அளவு: அ+ அ- அ
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலை மோசமானதையடுத்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறி அழைத்து சென்று மருத்துவமனையின் நுழைவு வாயிலிலேயே போலீசார் இறக்கிவிட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது.
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளாக நேற்று சென்னை ஈவேரா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து போராடிய மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலை மோசமானதால், மெரினா காவல்துறையினர் அவர்களை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறி அழைத்து சென்று மருத்துவமனையின் நுழைவு வாயிலிலேயே இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனையின் நுழைவாயிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பேசிய, மாற்றுத்திறனாளி மாணவர்களின் சங்கத் துணை தலைவர் ராமராஜன், 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடரும் என்றும், மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் அவலநிலை தமிழகத்தில் மட்டும் தான் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.