எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், வெப்ப தாக்கத்தினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? அவற்றிலிருந்து அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அடுத்த ஒரு சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தமிழகத்தில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது வாட்டி வதைத்து வரும் வெயிலில் சிக்கி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் சிரமப்படுவது போல் கர்ப்பிணி பெண்களும் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு உடல் வெப்பநிலை இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகவும், தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் அவர்களது உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே கர்ப்பிணிப் பெண்கள் தினசரி ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதுடன், நீர் ஆகாரம் உட்கொள்ள வேண்டும் என மூத்த மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இயல்பாகவே வியர்க்கும் தன்மை அதிகமாக இருக்கும் நிலையில் கோடை காலங்களில் அவை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால், உடலில் தண்ணீரின் அளவு, தாது சத்துக்களின் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் உடல் வலி, கால் வலி ஆகியவை ஏற்படுவதுடன், எளிதாக உடலில் வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தினசரி இரண்டு முறை குளித்தால் மட்டுமே உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள முடியும் என கூறும் மருத்துவர்கள், குளித்த பிறகு பவுடர் தொடர்புடைய பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல் கர்ப்பிணி பெண்கள் மிகவும் காரமான மற்றும் எண்ணெய் பொருட்களை உட்கொள்வதை குறைத்து வேகவைத்து உண்ண கூடிய உணவுகளை எடுத்துக் கொண்டால், செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருப்பதுடன், கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய சில சிக்கல்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
வெயில் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக குளிர்ந்த நீரை அருந்துவது அந்த 30 நொடிக்கு தீர்வாக இருக்குமே தவிர, பல்வேறு உடல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கும் மருத்துவர்கள், கர்ப்ப காலங்களில் ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை உட்கொள்வதால் சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும் என்றுமத் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு மாற்றாக குளிர்ந்த நீர் அருந்த வேண்டும் என்றால் மண் பானை ஆகியவற்றில் வைத்து பயன்படுத்தக்கூடிய நீரை அருந்துமாறு கூறுகின்றனர் மருத்துவர்கள்.
தமிழகத்தில் வாட்டி வதைத்து வரும் வெயிலிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு அதிகமாக நீர் உட்கொண்டு, வெயிலில் வெளியே செல்வதை தவிர்த்து தங்களது உடல்களை கவனித்துக் கொள்வதில் தனி அக்கறை செலுத்த வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.